கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் 3 நிரந்தர தூய்மை பணியாளர்கள், 44 ஒப்பந்த தூய்மை காவலர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் உடல்நலக்குறைவால் லலிதா என்கிற பெண் தூய்மை காவலர் உயிரிழந்தார். ஆனால் அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் அரசு சார்பில் எவ்வித நிவாரணமும், இழப்பீடும் வழங்கவில்லை.
இதை கண்டித்து நேற்று காலை அனைத்து தூய்மை பணியாளர்களும் ஒன்று திரண்டு பாதிரிக்குப்பம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ஊராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 20 ஆண்டுகளாக ஊராட்சியில் வேலை பார்த்த லலிதா நோய் தொற்றால் உயிரிழந்து விட்டார். ஆனால் ஊராட்சிக்காக உழைத்த அவரது குடும்பத்துக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.
பேச்சுவார்த்தை
அதேபோல்தான் நாங்களும் கொரோனா காலத்திலும், இப்போது வரை சிறப்பாக வேலை செய்து வருகிறோம். அவரது நிலை தான் கடைசி நேரத்தில் எங்களுக்கும் ஏற்படும். ஆகவே எங்களுக்கு உரிய பணி பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு அளிக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும். போதிய மருத்துவ வசதி வழங்க வேண்டும். சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஊராட்சிகள் உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரபரப்பு
இதையடுத்து அதிகாரிகள், 2 மாதத்தில் சம்பளத்தை உயர்த்தி வழங்குவது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கு வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர்.
கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி மீண்டும் இதேபோல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி தூய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.