ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ரவீந்திரன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்த ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பம்பு ஆபரேட்டர்கள் என 27 பேர் பணிபுரிந்து வருகின்றன்ா.
இந்த நிலையில் நேற்று தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த சிவகாமி என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் ரவீந்திரன் வேறு இடத்தில் பணி செய்ய வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் ரவீந்திரனை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம், போனஸ் உள்ளிட்டவற்றை வழங்காமல் இழுத்தடித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிவகாமியிடம் ஊராட்சி மன்ற தலைவர் மன்னிப்பு கேட்டதால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.