தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
ஊட்டி நகரில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
ஊட்டி
ஊட்டி நகரில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
தற்காலிக தொழிலாளர்கள்
ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 86 ஆயிரம் மக்கள் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டலாம். மேலும் ஓட்டல்கள், கடைகள் என சுமார் 4 ஆயிரம் வணிக நிறுவனங்கள் உள்ளன. இது தவிர ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதன்படி ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தினசரி சுமார் 32 டன் குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் தீட்டுக்கல் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த பணியில் 123 நிரந்தர தொழிலாளர்கள், 163 தற்காலிக தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
ஒப்பந்த காலம் முடிந்தது
இந்த நிலையில் கடந்த 31-ந் தேதியுடன் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கான ஒப்பந்த காலம் முடிந்து விட்டது. இதனால் இருக்கும் நிரந்தர பணியாளர்களை கொண்டு சுகாதாரத்துறையினர் தூய்மை பணிகளை முடிந்த வரை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் நகரில் ஆங்காங்கே மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே விரைந்து தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடுதலாக 2 மாதங்கள் பணி
இதுகுறித்து நகராட்சி அதிகாரி கூறியதாவது:-
வழக்கமாக ஒப்பந்த பணியாளர்களின் பணி காலம் முடிந்தவுடன், அவர்களது ஒப்பந்தம் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்படும். ஆனால் தற்போது நிரந்தர தூய்மை பணியாளர்களை அலுவலகத்தில் வேறு பணிகளுக்கு மாற்றம் செய்துவிட்டு மொத்தமாக இருக்கும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர் பணியிடங்களை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது இந்த பணிகளுக்கான டெண்டர் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் முடிய 2 மாத காலம் ஆகும். அதுவரை பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருப்பதற்காக ஏற்கனவே பணியில் இருந்த ஒப்பந்த பணியாளர்களை கூடுதலாக 2 மாதத்திற்கு பணியாற்ற அனுமதிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அவர்கள் ஒரு சில தினங்களில் பணிக்கு வந்து விடுவார்கள். மேலும் தற்போது நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 22 ஆட்டோக்கள், ஒரு லாரி மூலம் குப்பைகள் அள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.