குப்பைகளுக்கு தீவைப்பதால் சுகாதார சீர்கேடு
பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில் குப்பைகளுக்கு தீவைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி கோவை ரோடு சி.டி.சி. மேட்டில் நகராட்சி நுண் உரமாக்கல் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குப்பைகள் கொண்டு வரப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் உரமாக்கல் மையத்திற்கு வெளியே கொட்டப்பட்டு உள்ள குப்பைகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் புகை வெளியேறியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு குப்பையில் பிடித்த தீயை அணைத்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், உரமாக்கல் மையத்தில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கின்றனர். இதற்கிடையில் அதற்கு வெளியில் கொட்டப்பட்டு உள்ள குப்பைக்கு தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சி.டி.சி. மேட்டில் அண்ணா நகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இதனால் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்பைகளுக்கு தீவைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நகராட்சி மூலம் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கப்படுகிறது. இதற்கிடையில் உரமாக்கல் மையத்திற்கு வெளியே உள்ள மரக்கழிவுகளுக்கு யாரோ தீவைத்ததாக தெரிகிறது. இதனால் தீப்பிடித்து புகைவெளியேறி உள்ளது. எனவே குப்பைகளை தீவைத்து எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.