சங்கீத மும்மூர்த்திகள் இசை ஆராதனை விழா

சங்கீத மும்மூர்த்திகள் இசை ஆராதனை விழா

Update: 2023-04-28 18:45 GMT

திருவாரூரில் நடந்த சங்கீத மும்மூர்த்தி இசை ஆராதனை விழாவில் திரளான இசை கலைஞர்கள் பங்கேற்றனர்.

இசை விழா

கர்நாடக இசை மும்முர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சதர் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரிய தலம் திருவாரூர் ஆகும். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுக்கு இசை அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் இசை விழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான இசை விழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. 5-வது நாளான நேற்று தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை பாடி இசை அஞ்சலி செலுத்தப்பட்டு இசைவிழா நிறைவடைந்தது.

சிறப்பு தவில்-நாதஸ்வர இசை

விழாவில் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆண்டாங்கோவில் சிவக்குமார், ரஞ்சனி கவுசிக், இசைக்கலைஞர் காயத்திரி கிரீஸ், சீர்காழி சிவசிதம்பரம் உட்பட முன்னணி இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

நிறைவு நாளான நேற்று காலை முதலே இசை நிகழ்ச்சிகள் தொடங்கின. அதன்படி தியாகராஜர் அவதரித்த இல்லத்திலிருந்து தியாகராஜரின் உருவப்படம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து கமலாம்பாள் சன்னதியில் சிறப்பு தவில் மற்றும் நாதஸ்வர இசை நிகழ்ச்சிகள் நடந்தது.

பஞ்சரத்ன கீர்த்தனை

பின்னர் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற்றது. அப்போது தியாகராஜர் இயற்றிய நாட்டை, கவுளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் ஆகிய அரிய ராகங்களில் இசைக்கலைஞர்கள் தங்களுடைய இசைக்கருவிகளில் வாசித்தும், கர்நாடக இசைப்பாடகர்கள் ஏராளமானோர் ஒன்றாக அமர்ந்து பாடியும் தியாகராஜருக்கு இசைஅஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஏராளமான இசை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்