ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய மணல் மூட்டைகள் தயார்

திருமருகல் ஒன்றியத்தில் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

Update: 2022-11-16 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியத்தில் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருமருகல் ஒன்றிய பகுதியில் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு, வளப்பாறு, நரிமணி ஆறு, ஆழியான் ஆறு, பிராவடையானாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன.

தற்போது பருவமழை தீவிரம் அடைந்து கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கலெக்டர் ஆய்வு

ஆறுகள் மற்றும் வடிகால்களின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்ய திருமருகல் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்பு மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இந்த மணல் மூட்டைகளை நாகை கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருமருகல் பகுதியில் ஆறுகளின் கரையில் உடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்ய மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன என்றார். மேலும் தேவையை உணர்ந்து அதிக அளவில் மணல் மூட்டைகளை சேமித்து வைக்க அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை தஞ்சை கீழ் காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, நன்னிலம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செங்கவராயன், திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி, திருமருகல் உதவி பொறியாளர்கள் சரவணன், செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்