சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா
கமுதி முஸாபர் அவுலியா தர்காவில் நடந்த சந்தனக்கூடு திருவிழாவில் ஏராளமான முஸ்லிம், இந்துக்கள் கலந்து கொண்டனர்..
கமுதி,
கமுதி முஸாபர் அவுலியா தர்காவில் நடந்த சந்தனக்கூடு திருவிழாவில் ஏராளமான முஸ்லிம், இந்துக்கள் கலந்து கொண்டனர்..
சந்தனக்கூடு திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பிரசித்தி பெற்ற முஸாபர் அவுலியா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. முன்னதாக கமுதி-சுந்தரபுரம் தைக்கா வீட்டில் இருந்து இந்த சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டது. தர்கா நிர்வாக தலைவரும், பேரூராட்சி தலைவருமான அப்துல் வஹாப் சகாராணி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக் குடத்தை, மின் விளக்குகளால் அலங்கரித்த சந்தனக் கூட்டில் வைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
தீப்பந்தம்
ஏராளமான முஸ்லிம் மற்றும் இந்துக்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தின் முன்பு இளைஞர்கள் தீப்பந்தத்தை சுற்றி கொண்டே சென்றனர்.
இரவு முழுவதும் முஸ்லிம் பஜார் மற்றும் முஸ்லிம் தெருக்கள் வழியாக சென்ற இந்த சந்தனக்கூடு ஊர்வலம் அதிகாலை தர்காவை வந்தடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.