பெண்ணாடம் அருகே மாட்டு வண்டி மீது மணல் லாரி மோதல்; ரெயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

பெண்ணாடம் அருகே மாட்டுவண்டி மீது மணல் லாரி மோதியது. இதனால் ரெயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-19 18:45 GMT

பெண்ணாடம், 

பெண்ணாடம் அருகே பெ.பொன்னேரி அருகே வெள்ளாறு உள்ளது. இந்த ஆற்றுக்கு எதிர்கரை அரியலூர் மாவட்ட எல்லையாகும். அங்கு சேந்தமங்கலம் கிராமத்தில் அரசு மணல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு, மணல் அள்ளும் லாரிகள், ஆற்றின் வழியாக பெ.போன்னேரிக்கு வருகின்றன. பின்னர் அங்கிருந்து விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் பொன்னேரி மேம்பாலத்தின் வழியாக சென்று, பல்வேறு பகுதிகளுக்கு மணல் லாரிகள் செல்கின்றன. இந்த மணல் லாரிகளால் பெ.போன்னேரி பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நேர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அதே ஊரை சேர்ந்த பரமசிவன் மகன் மணவாளன் (வயது 33) என்பவர் மாட்டுவண்டியில் மணல் அள்ளிக்கொண்டு, இறையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் பெ.பொன்னேரியில் ரெயில்வே மேம்பாலத்தில் சென்ற போது, அந்த வழியாக மணல் அள்ளி வந்த லாரி, மாட்டுவண்டியின் மீது பலமாக மோதியது. இதில் மாடுகளுக்கு காயம் ஏற்பட்டதுடன், மாட்டுவண்டியும் சேதமானது. மணவாளன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தொடர்ந்து சம்பவத்தால் மேம்பாலத்தில் இருந்து விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து தகவல் அறிந்த பெண்ணாடம் சப்- இன்ஸ்பெக்டர் பிரகஷ்பதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்