பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து மணல் கடத்தலா?
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து மணல் கடத்தலா? கனிம வள உதவி இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
பழனி ஆயக்குடியை சேர்ந்த கனிதா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-
பழனி ஆயக்குடி டவுன் பஞ்சாயத்தில் வார்டு கவுன்சிலராக உள்ளேன். எங்களது பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சட்டப்பாறை, பொன்னிமலை சித்தர் கோவில், கன்னிமார்கோவில், மீன்பாறை, வண்ணான்துறை மற்றும் பாப்பாகுளம் வாய்க்கால் ஆகிய கிராமங்களின் அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோத மணல் கடத்தல் நடந்து வருகிறது. இதனால், வனவிலங்குகள், பறவைகள் ஆகியன ஊருக்குள் வரும் நிலை உள்ளது. பறவைகள், விலங்குகள் வசிப்பிடங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதுடன், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வரதமாநதி அணை நீர்ப்பிடிப்பு பகுதி வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். அங்கிருந்து மணல் கடத்தும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்கவும், அருகில் உள்ள பொதுமக்களுக்கான தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடு ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், கனிம வள உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மணல் கடத்தலை தடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இந்த விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கனிம வள உதவி இயக்குனர் அடுத்த மாதம் 11-ந் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.