மணல் கடத்திய வாலிபர் கைது; தப்பி ஓடிய 3 பேருக்கு வலைவீச்சு
திருவோணம் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 சரக்கு வேன்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
திருவோணம் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 சரக்கு வேன்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீசார் ரோந்து பணி
ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட நெய்வேலி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஆற்றுப்படுகைகளில் இருந்து மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல், ஏட்டு ராஜா, போலீஸ்காரர்கள் ஜெகன், சின்னத்துரை ஆகியோர் நேற்று முன்தினம் இரவு திருவோணம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சரக்கு வேனில் சோதனை
அப்போது திருவோணத்தை அடுத்துள்ள மேட்டுப்பட்டி அருகே சாலையில் அதி வேகமாக வந்த 2 சரக்கு வேன்களை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். இதில் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதற்கிடையே மணல் கடத்தி வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது நெய்வேலி வடபாதி ஆவனாண்டிகொல்லை பகுதியைச் சேர்ந்த கவிநேசன் (வயது20) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
வாலிபர் கைது
இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குகள் பதிவு செய்து கவிநேசனை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வேன்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.