கடலின் நடுவே புதிதாக உருவாகியுள்ள மணல் திட்டு
கடலின் நடுவே புதிதாக மணல் திட்டு உருவாகியுள்ளது.
தனுஷ்கோடி
ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தனுஷ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதி. பொதுவாகவே இந்த தனுஷ்கோடி பகுதி கடல் நீரோட்டம் மற்றும் சீற்றம் உள்ள பகுதியாகும். அதுபோல் இந்திய பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா என இரண்டு கடலும் ஒன்று சேரும் இடம் தான் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதி. ராமேசுவரத்திற்கு தினமும் வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் தனுஷ்கோடி அரிச்சல் முனை சென்று சாலை வளைவில் நின்று இரண்டு கடல் சேருமிடம் மற்றும் கடற்கரை அழகையும் பார்த்து ரசித்து விட்டுதான் திரும்பி செல்கின்றனர்.
இந்த நிலையில் தனுஷ்கோடி அரிச்சல் முனை தெற்கு கடல் பகுதியில் புதிதாக மணல் திட்டு ஒன்று உருவாகியுள்ளது. கடலின் நடுவே உருவாகியுள்ள இந்த மணல் திட்டை அரிச்சல் முனை கடற்கரை சாலையில் நின்று சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் நின்று வேடிக்கை பார்த்தும் கடற்கரையில் நின்று செல்பியும் எடுத்து வருகின்றனர். கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் அதிகமாகும் பட்சத்தில் இந்த மணல் திட்டு பகுதியும் நாளடைவில் கடல் நீரால் மூடப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.