சரணாலயத்தில் நிலப்பறவைகள் மாதிரி கணக்கெடுப்பு பணி

கோடியக்கரையில் சரணாலயத்தில் நிலப்பறவைகள் மாதிரி கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

Update: 2023-02-25 18:45 GMT

வேதாரண்யம்:

கோடியக்கரையில் சரணாலயத்தில் நிலப்பறவைகள் மாதிரி கணக்கெடுக்கும் பணி. நடைபெற்றது.

கோடியக்கரை சரணாலயம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து 290 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு சரணாலயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளன. அந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த மாதம் (ஜனவரி) 28, 29 ஆகிய 2 நாட்கள் நடந்தது.

இதில் சுமார் 1 லட்சம் நீர் பறவைகள் இருந்ததாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் 147 வகையான பறவை இனங்கள் வந்து சென்றதாகவும் அதில் கோடியக்கரைக்கு 96 வகையான பறவைகள் வந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலப்பறவைகள் மாதிரி கணக்கெடுப்பு பணி

இந்த நிலையில் அடுத்த மாதம் (மார்ச்) 4, 5-ந்தேதிகளில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் 10 குழுக்களாக பிரிந்து மாதிரி கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கோடியக்கரை வனப்பகுதியில் காலவாய்க்கரை, சோழர்கால கலங்கரை விளக்கம், சித்தர் கட்டம் மற்றும் கோடியக்கரை, கோடியக்காட்டை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. இதில் கருங்குயில், புள்ளி குயில், மீன் கொத்தி, மரங்கொத்தி, கவுதாரி, செண்பகம், கிரீன் டீ ஈட்ட, மணிப்புறா, வக்கா உள்ளிட்ட 71 வகையான பறவை இனங்கள் கண்டறியப்பட்டது.

2 ஆயிரத்து 700 பறவைகள் உள்ளன

இந்த மாதிரி கணக்கெடுப்பில் 2 ஆயிரத்து 700 பறவைகள் தற்போது உள்ளன தெரியவந்துள்ளது இந்த ஆண்டு போதுமான மழையும், பறவைகளுக்கு ஏற்ற சூழல் நிலவுவதால் நீர் பறவைகள் லட்சக்கணக்கில் வந்துள்ளது.

வருகிற மார்ச் 4,5 ஆகிய தேதிகளில் நடைபெறும் கணக்கெடுப்பு பணி நடைபெறும் அதன்பின்பு கணக்கெடுப்பில் இந்த ஆண்டு பறவைகள் வரத்து குறித்து தெரியவரும் என வனத்துறை அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்