முனீஸ்வரன் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு
குடியாத்தம் அருகே முனீஸ்வரன் கோவிலில் சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள், கருப்பசாமி சிைலயை திருடிச்சென்றுள்ளனர்.
முனீஸ்வரன் கோவில்
குடியாத்தம்-சித்தூர் சாலையில் பாக்கம் ஊராட்சி, பாக்கம் ஏரிக்கரையில் காளியம்மன் கோவில் உள்ளது. அதன் அருகிலேயே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாபுரம் பொதுமக்கள் சார்பில் முனீஸ்வரன் கோவில் கட்டப்பட்டது. இந்த முனீஸ்வரன் கோவிலில் சுமார் 3 அடி உயரத்திற்கு கருப்பசாமி கற்சிலை வைத்து பூஜைகள் நடைபெற்று வருகிறது.
குடியாத்தம்-சித்தூர் சாலை வழியாக வெளியூர் செல்பவர்கள், சுற்றுப்புற கிராமப்பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு செல்வார்கள். மேலும் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும் வழிபட்டு செல்வார்கள்.
சிலைகள் உடைப்பு
இந்தநிலையில் நேற்று காலையில் இந்த வழியாக சென்றவர்கள் கோவிலில் சாமி கும்பிட வந்தனர். அப்போது முனீஸ்வரன் கோவிலின் முன்பாக இரண்டு பக்கமும் பாதுகாவலர் சிலைகளின் கைகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கிருந்த கருப்பசாமி சிலை பீடத்தை உடைத்து சிலை திருடப்பட்டு இருந்தது.
இந்த சம்பவம் காட்டுத் தீ போல் பரவியது. இதனால் சிலைகள் உடைக்கப்பட்ட முனீஸ்வரன் கோவிலுக்கு பாக்கம், வெங்கடாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்தவர்கள் வந்து பார்த்தபடிஇருந்தனர்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி சப்- இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், அருண்காந்தி, அண்ணாதுரை, ஜெயபால், நாகராஜன் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் சுற்றுப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் கிணற்றில் சிலையை வீசிச் சென்றுள்ளனரா என ஆய்வு செய்தனர்.
பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி மணவாளன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோரும் சென்று பார்வையிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகிகள் பரமசிவம், அன்பழகன் உள்ளிட்டோர் பரதராமி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டதுடன், சிலையை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.