அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் மாணவர்களுக்கு பயன் தருமா?;

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் மாணவர்களுக்கு பயன் தருமா? என்பது குறித்து கல்வியாளர்கள், மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-12-14 17:16 GMT

பள்ளிக்கல்வி அடித்தளம் தந்தாலும், உயர்கல்விதான் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்துக்கு ஏணியாக அமைகிறது.

12-ம் வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியை பார்த்து, பார்த்து தேர்வு செய்து படிக்கிறார்கள்.

அவ்வாறு படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு படிக்கும்போதே தொழில் சார்ந்த வழிகாட்டுப் பாதையை உருவாக்கித் தரவேண்டும் என்ற நோக்கில், அரசு தற்போது திட்டமிட்டு வருகிறது.

புதிய பாடத்திட்டம்

அதன் ஒரு பகுதி யாக கொண்டு வரப்பட்டதுதான், முதல்-அமைச்சரின் கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டம். அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்களையும் உயர்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்தில் என்ஜினீயரிங் மாணவர்களைத் தொடர்ந்து, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் இணைக்கப்பட இருக்கிறார்கள்.

உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த மாதம் உயர் அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆகியோருடன் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

அப்போது 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர்கல்வி வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. குறிப்பாக பாடத் திட்டங்களை மாற்றுவது குறித்த விவகாரம் முக்கியமாக பேசப்பட்டது. மாணவர்களை வேலை பெறுவோராக மட்டுமல்லாமல், வேலை தருபவர்களாகவும் மாற்றும் விதத்தில் புதிய பாடத்திட்டங்கள் அமைய வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அடுத்த கல்வி ஆண்டில்...

அதன்படி, பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. இதுதொடர்பாக புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் வழங்கப்பட இருக்கிறது.

இந்த கூட்டத்தின் நிறைவில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, 'அறிவியல், கலை, மனிதநேயம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளும் திறன் சார்ந்ததாக இருக்கும். துணைவேந்தர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் பின்பற்றப்படும்' என்றார்.

குறிப்பாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மொழி பாடங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கிறது.

13 பல்கலைக்கழகங்கள்

தமிழ்நாட்டில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்பட 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைப்பில் இருக்கும் கல்லூரிகளில் இந்தப் பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும்.

இதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டங்களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அந்தப் பாடங்களுடன் திறன், கணினி சார்ந்த புதிய தோற்றத்தில் பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன.

அறம் சார்ந்த கல்வி

இந்த திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் அமலுக்கு வந்தால் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் இருக்குமா? என்பது பற்றி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கல்வியாளர்கள், மாணவர்கள் கூறியதாவது:-

கல்வியாளர் சரவணன் :- அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஓரே மாதிரியான பாடத்திட்டம் என்பது வரவேற்கப்பட வேண்டியது. இதன் மூலம் வேலைவாய்ப்புக்கான பாடங்களை அனைத்து மாணவர்களும் படிக்க ஏதுவாக அமையும். பொதுவாக வேலைவாய்ப்பை மனதில் கொண்டே பாடங்கள் திட்டமிடுகின்றன. நிகர்நிலை பல்கலைகள், தன்னாட்சி கல்லூரிகள் வேலைவாய்ப்புக்கு ஏற்ப பாடத்திட்டங்களை வடிவமைப்பதால் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் மற்ற கல்வி நிறுவனங்களை விட முன்னிலையில் உள்ளன.

இந்த ஒரே பாடத்திட்டம் தன்னாட்சி, நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு பொருந்துமா? என்று பார்க்க வேண்டும். மேலும் மாணவர்கள் விரும்பும் வேலைவாய்ப்புகள், வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களுக்கு ஏற்ப பாடங்களை வடிவமைக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்களுக்கு அறம் சார்ந்த கல்விகளை கொடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அரசு அதிலும் கவனம் செலுத்தி நாட்டு நலப்பணித்திட்டம், ரெட் கிராஸ், ரெட் ரிப்பன் கிளப் போன்ற ஏதாவது ஒரு சேவைத்திட்டத்தில் மாணவர்களை ஈடுபடுத்தி சமூக சேவையை கல்விக்கூடங்களிலேயே கற்பிக்க வேண்டும்.

மேலும் பேராசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளித்து பின்னர் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். அதோடு முறையாக கண்காணித்து தவறுகள் ஏற்படாத வகையில் சீரான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தரமான கல்வி, சமூக பொறுப்பு, திறன் வளர்ப்பு கற்பித்தல் ஆகியவை தரமான, நிரந்தரமான ஆசிரியர்களை கொண்ட கல்வி நிலையங்களுக்கே சாத்தியம். அதை ஒவ்வொரு ஆண்டும் தகுதியான பேராசிரியர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் நன்றாக திட்டமிட்டு நடைப்படுத்தினால் வருங்கால மாணவர்கள் வளமான, தரமான சமூகத்தை கட்டமைக்க மிக்க உதவியாக இருப்பார்கள்.

பெற்றோர்களின் நீண்டகால கனவு

கல்லூரி முதல்வர் சீனிவாசன்:- நாடு முழுவதும் 1,056 அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. இவை ஒவ்வொன்றிலும் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளுக்கு என்று பாடத்திட்டங்களை வகுத்துத் தருவதற்கு பேராசிரியர்கள், கல்வியாளர்களை கொண்ட பாடத்திட்டக்குழு உள்ளது. இதனால் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு விதமான பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் மத்திய அரசின் வேலை பணியாளர் தேர்வாணையமும், மாநில அரசின் போட்டித் தேர்வுகளை நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் ஒரே வினாத்தாளை பாகுபாடின்றி பயன்படுத்துவதால் தேர்வு செய்யப்படும் முறையிலும், தேர்வர்களின் தரத்திலும் மிகுந்த முரண்பாடு உள்ளது. ஆகவே அனைத்துப் பல்கலைக் கழகங்களும் சீரான பாடத்திட்டத்தை பின்பற்றுவது தேர்வர்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக அமையும். நாட்டின் சீரான கல்வி வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். ஆனால் அடிப்படை கல்வித் திட்டத்திலேயே மேற்கத்திய நாடுகளைப் போல ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் நீண்ட நாள் கனவு.

சீரான கல்வி வளர்ச்சி

கல்லூரி மாணவர் சஞ்சய் (திண்டுக்கல்) :- அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இதனால் நாட்டின் கல்வி வளர்ச்சி சீராக இருக்கும். மாணவர்கள் வெவ்வேறு விதமான பாடங்களை படிப்பது தவிர்க்கப்படும். அனைத்து மாணவர்களும் ஒரே பாடத்திட்டத்தை படிப்பதால் நுழைவு தேர்வுகளில் எளிதில் வெற்றிபெறலாம். அதேபோல் ஒரே பாடத்தை படிப்பதன்மூலம் அரசு போட்டி தேர்வுகளை எழுதுவதற்கும் வசதியாக இருக்கும்.

திறமையின் அடிப்படையில் வெற்றி

கல்லூரி மாணவி அகிலாண்டேஸ்வரி (திண்டுக்கல்) :- ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு பாடத்திட்டம் இருப்பதால் மாணவர்களின் கல்வி தரம் வேறுபடுகிறது. இதனால் நுழைவு தேர்வு, அரசு போட்டி தேர்வுகளில் வெற்றிபெறுவதில் ஒருசில மாணவர்கள் பின்தங்கி விடுகின்றனர். ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டால் அனைவரும் ஒரே பாடத்தை படிக்கும் வாய்ப்பு ஏற்படும். திறமையின் அடிப்படையில் மாணவர்கள் தங்களுடைய வெற்றியை நிர்ணயிக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்