தஞ்சை மாவட்டம் பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் குறுவை பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏரி பாசன பகுதிகளான செங்கிப்பட்டி பகுதியில் உள்ள சில கிராமங்களில் சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்பா நடவு பணிகளிலும், நாற்றுப்பறிக்கும் பணிகளிலும் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குறுவை அறுவடை செய்யப்பட்ட வயல்களில் தாளடி நடவு பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. குறுவை அறுவடை செய்யப்பட்ட வயல்களில் உழவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் முன்பு நடவு பணிகளை செய்து விட வேண்டும் என்று விவசாயிகள் வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.