வேதாரண்யத்தில் உற்பத்தி இலக்கை எட்ட உப்பள தொழிலாளர்கள் மும்முரம்
வேதாரண்யத்தில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு உற்பத்தி இலக்கை எட்ட உப்பள தொழிலாளர்கள் மும்முரமாக முயற்சித்து வருகிறார்கள்.
வேதாரண்யத்தில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு உற்பத்தி இலக்கை எட்ட உப்பள தொழிலாளர்கள் மும்முரமாக முயற்சித்து வருகிறார்கள்.
உப்பு உற்பத்தி பாதிப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு உள்ளிட்ட இடங்களில் 9 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. உப்பு உற்பத்தி தொடங்கியதில் இருந்து கடந்த 8 மாதங்களாக பருவம் தவறி பல முறை மழை பெய்தது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது
இலக்கை எட்ட முடியவில்லை
தற்போது வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. கடந்த 10 நாட்களாக வேதாரண்யம் பகுதியில் வெயில் கடுமையாக சுட்டெரிப்பதால் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் உப்பு உற்பத்தி மீண்டும் மும்முரமாக நடந்து வருகிறது. உப்பு உற்பத்திக்கான பணிகளில் தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர். வேதாரண்யம் பகுதியில் ஆண்டுதோறும் 6 லட்சம் டன் என்ற அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படும் நிலையில் இந்த ஆண்டு உற்பத்தி தொடங்கி 8 மாதங்களை கடந்து விட்ட பின்னரும் இலக்கை எட்ட முடியவில்லை.
மழைக்காலத்தில் விற்பனை
இடையிடையே மழை பெய்ததே உப்பு உற்பத்தி இலக்கை எட்ட முடியாததற்கு காரணம் என உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். வேதாரண்யம் பகுதியில் ஜனவரி மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை 10 மாதங்கள் உப்பு உற்பத்தி காலமாகும். அக்ேடாபரில் மழை தொடங்குவதற்குள் உப்பு உற்பத்தி பணிகளை முடித்து விடுவார்கள்.
சில நேரங்களில் இலக்கை மிஞ்சி உற்பத்தி நடைபெறும்போது உப்பை அம்பாரம் (குவித்து) வைத்து பிளாஸ்டிக் தார்ப்பாய் கொண்டு மூடி மழைக்கால விற்பனைக்காக இருப்பு வைப்பார்கள்.
இலக்கை எட்ட முயற்சி
வேதாரண்யத்தில் ஆண்டுதோறும் 5 லட்சம் முதல் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திேலயே பருவம் தவறி பெய்த மழை காரணமாக உப்பு உற்பத்தியில் தொடர்ந்து சுணக்கம் ஏற்பட்டு வருகிறது.
அடுத்த மாதத்தில் (அக்டோபர்) வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்க வாய்ப்பு உள்ள நிலையில் அதற்கு முன்பாக இந்த ஆண்டுக்கான உற்பத்தி இலக்கை எட்ட உப்பள தொழிலாளர்கள் மும்முரமாக முயற்சித்து வருகிறார்கள்.