முடி திருத்தம் செய்துகொண்டு பணம் தராததால் ஆத்திரம் - சவர கத்தியால் கழுத்தை அறுத்த பயங்கரம்..!

வடமாநில வாலிபர் கொலை வழக்கில் சலூன் கடைக்காரர் கைது செய்யப்பட்டார். முடி திருத்தம் செய்துகொண்டு பணம் தராததால் ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார்.

Update: 2022-09-06 14:35 GMT

வேலூர்:

காட்பாடி காந்திநகர் வணிகவளாகம் அருகே கடந்த 22-ந் தேதி கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கிடந்தார். அவரை விருதம்பட்டு போலீசார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அபனிசரணியா (வயது 34) என்பது தெரியவந்தது.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர் குறித்த வேறு எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. அவரை யார் கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் கீழ்வெண்பாக்கம் பகுதியை சேர்ந்த சலூன் கடைக்காரர் விஜயராகவன் (26) என்பவர் அபனிசரணியாவை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறியதாவது,

கொலை செய்யப்பட்ட வடமாநில நபர் அஸ்ஸாமில் இருந்து ரெயிலில் காட்பாடிக்கு வந்ததுள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியே சாலையில் நடந்து சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் அவர் எங்கு சென்றார் என்று ஆய்வு செய்யப்பட்டதில், தனியார் கல்லூரி ரவுண்டானா அருகே உள்ள ஒரு சலூன் கடைக்கு சென்றதும், பின்னர் அங்கிருந்து 40 நிமிடங்கள் கழித்து கழுத்தில் கையை வைத்துக் கொண்டு வெளியே வந்ததும் தெரியவந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்தவர் முடி திருத்தம் செய்துகொண்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே அவர் சென்ற சலூன் கடையில் விசாரணை நடத்தினோம். அப்போது கடைக்காரர் விஜயராகவனுக்கும், இறந்த நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

சம்பவத்தன்று கடைக்கு வந்த நடமாநில நபர் முடி வெட்டி உள்ளார். ஆனால் அதற்கு அவர் பணம் கொடுக்கவில்லை. அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் விஜயராகவன் சவர கத்தியால் அபனிசரணியாவின் கழுத்தை அறுத்துவிட்டார்.

அங்கிருந்து வெளியே சென்றபின்னர் வடமாநில நபர் இறந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இந்த வழக்கில் திறம்பட புலன்விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசாரை சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்