அன்னாசி பழங்கள் விற்பனை விறுவிறுப்பு

ராமநாதபுரத்தில் கேரள அன்னாசி பழங்கள் அதிகளவில் வந்துள்ளதால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-08-13 18:45 GMT

ராமநாதபுரத்தில் கேரள அன்னாசி பழங்கள் அதிகளவில் வந்துள்ளதால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெயிலின் தாக்கம்

பருவநிலைக்கு ஏற்பவும், மனிதனின் கால சூழ்நிலைக்கேற்பவும் இயற்கையால் பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் படைக்கப்பட்டுள்ளன. கோடை காலம் குளிர்காலம் என அந்தந்த காலத்திற்கு ஏற்ற பழங்கள் சீசன் காலங்களாக உள்ளன. குறிப்பாக கடும் கோடை காலத்தில் தான் உடலுக்கு கோடையின் வெப்பத்தை தாங்கும் வகையிலான பழங்கள் அதிகமாக விளைகின்றன. அந்த வகையில் முதலில் நுங்கு உள்ளிட்டவைகள் தவிர தர்பூசணிப்பழம், கிர்னி பழம், பலாப்பழம், மாம்பழம், நாவல்பழம், சீத்தாபழம், ஆரஞ்சு பழம் என பழங்களின் வகைகள் அதிகமாகும்.

தற்போது கடும் கோடைகாலம் முடிவடைந்தாலும் இன்றளவும் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மக்கள் கோடைதாக்கத்தை சமாளிக்கும் வகையில் தற்போது அன்னாசி பழம் சீசன் தொடங்கி உள்ளது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அன்னாசி பழம் சாகுபடி செய்தாலும் கேரள மாநிலத்தில் மட்டுமே அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கேரள அன்னாசி பழங்களின் ருசி தனி என்பதால் மக்கள் அதனை விரும்பி வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

அன்னாசி பழங்கள் விற்பனை

அன்னாசி பழத்தில் உடலுக்கு பல நன்மைகள் நிறைந்த சத்துக்கள் உள்ளதால் அதிகம் விற்பனையாகி வருகிறது. அன்னாசி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், நமது உடலுக்கு வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் அதிகம் கிடைப்பதோடு அன்னாசி இலைச்சாறு வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டவை என்று கூறப்படுகிறது. அன்னாசி பழத்தை தேனில் சேர்த்து சாப்பிட்டு வர உடல் பலம் கூடும் என்று முன்னோர் கூறி வந்துள்ளனர்.

ராமநாதபுரம் நகரில் பல பகுதிகளில் மினி சரக்கு வாகனங்களில் அன்னாசி பழங்களை குவியல் குவியலாக கொண்டு வந்து சாலைகளின் ஓரங்களில் கொட்டி கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.

கிலோ ரூ.50 என்ற விலையிலும் ஒரு பழம் ரூ.25 என்ற விலையிலும் விற்பனை செய்கின்றனர்.

பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்