7.58 லட்சம் கிலோ தேயிலைத்தூள் விற்பனை
குன்னூர் தேயிலை ஏல மையத்தில், 7.58 லட்சம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது.
குன்னூர்,
குன்னூர் தேயிலை ஏல மையத்தில், 7.58 லட்சம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது.
ஏல மையம்
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலைத்தூள் குன்னூரில் உள்ள தேயிலை ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு, தேயிலைத்தூளை ஏலம் எடுக்கின்றனர். தேயிலை ஏலம் வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை என 2 நாட்கள் நடக்கிறது.
விற்பனை எண் 25-க்கான ஏலம் கடந்த 23, 24-ந் தேதிகளில் நடைபெற்றது. ஏலத்திற்கு மொத்தம் 25 லட்சத்து 43 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 19 லட்சத்து 15 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 6 லட்சத்து 28 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 30 சதவீத தேயிலைத்தூள் விற்பனையானது. விற்பனையான தேயிலைத்தூளின் அளவு 7 லட்சத்து 58 ஆயிரம் கிலோவாக இருந்தது.
விற்பனை குறைவு
இதன் மதிப்பு ரூ.7 கோடியே 4 லட்சம் ஆகும். சி.டி.சி. தேயிலைத்தூள் அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.314, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள் அதிகபட்சமாக கிலோ ரூ.285-க்கு ஏலம் போனது. சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண வகை கிலோவுக்கு ரூ.62 முதல் ரூ.67 வரையும், விலை உயர்ந்த தேயிலைத்தூள் கிலோ ரூ.140 முதல் ரூ.195 வரை ஏலம் சென்றது.
டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை கிலோ ரூ.65 முதல் ரூ.69 வரையும், விலை உயர்ந்த தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.161 முதல் ரூ.226 வரை ஏலம் போனது. விற்பனை எண் 26-க்கான ஏலம் வருகிற 30, 1-ந் தேதிகளில் நடக்கிறது. ஏலத்திற்கு மொத்தம் 24 லட்சத்து 49 ஆயிரம் கிேலா தேயிலைத்தூள் வருகிறது. தேயிலைத்தூள் விற்பனை குறைவாக உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.