இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை சரிவு

புரட்டாசி மாதம் பிறப்பு எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை சரிந்தது.

Update: 2022-09-18 19:26 GMT

புரட்டாசி மாதம்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாகும். இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் சிலர் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், நேற்று புரட்டாசி மாதம் தொடங்கியது. அதுவும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் புரட்டாசி மாதம் தொடங்கியதால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சேலம் மாநகரில் பழைய பஸ் நிலையம், குகை, அன்னதானப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் கோழி, ஆட்டிறைச்சி விற்பனை கடுமையாக சரிந்தது. ஆனால் ஒருசிலர் மட்டும் இறைச்சி கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்த இறைச்சிகளை வாங்கினர்.

60 சதவீதம் பாதிப்பு

அதேசமயம், சூரமங்கலத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் மீன் விற்பனை பாதிக்கப்பட்டது. மீன்களை வாங்க குறைந்த அளவு மக்கள் மட்டுமே வந்திருந்தனர். சேலத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள மீன் கடைகளிலும் வியாபாரம் பாதிக்கப்பட்டது. அதாவது, புரட்டாசி மாதம் எதிரொலியால் கோழி, ஆடு இறைச்சி விற்பனை சுமார் 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூரில் உள்ள மீன் மற்றும் இறைச்சி விற்பனை கடைகளில் வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் மேட்டூருக்கு வந்த சுற்றுலா பயணிகளும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்ததால், மீன் வறுவல் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் ஆத்தூர், ஓமலூர், சங்ககிரி, வாழப்பாடி, எடப்பாடி, தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளிலும் புரட்டாசி மாத பிறப்பால் மீன், இறைச்சி விற்பனை சரிவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்