மலர் செடிகள் விற்பனை அமோகம்
ஓசூர் பகுதியில் மலர் செடிகள் விற்பனை அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஓசூர்
ஓசூர் பகுதியில் மலர் செடிகள் விற்பனை அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மலர் செடிகள் உற்பத்தி
ஓசூர் அருகே பாகலூர், பேரிகை மற்றும் அகலக்கோட்டை, பாலதோட்டனபள்ளி, மரகததொட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில், மக்கள் நர்சரி தோட்டங்கள் அமைத்து மலர் செடி நாற்றுகளை உற்பத்தி செய்து வருகின்றனர். இங்கு ரோஜா, நிராபல், சென்ட்ரோஸ், கில்லி எல்லோ, கிள்ளி ஆரஞ்சு, மேங்கோ எல்லோ, மூக்குத்தி ரோஸ், தாஜ்மஹால், நோப்ளஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வகைகளில் மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்செடி நாற்றுகள் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு, மலர் செடி நாற்று ஏற்றுமதியில் நல்ல லாபம் பெற்று வந்த உற்பத்தியாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் மலர் செடிகள் விற்பனை குறைந்து விவசாயிகள் கவலை அடைந்தனர்.
விற்பனை அமோகம்
இந்த நிலையில், இந்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களுக்காக மலர் செடி நாற்றுகளின் விற்பனை தற்போது அமோகமாக உள்ளது. பொங்கல், காதலர் தினம் ஆகிய விழாக்கள் அடுத்தடுத்து வருவதால் வியாபாரிகள் வந்து மலர்ச்செடி நாற்றுகளை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் அகலக்கோட்டை சுற்று வட்டார கிராமங்களில் உள்ள நர்சரி தோட்டங்களில் நாற்றுகள் விற்பனை களை கட்டியுள்ளது.
மேலும், கேரளாவில், மக்கள் காதலர் தினம் உள்ளிட்ட விழாக்களை சிறப்பாக கொண்டாடுவதால் வியாபாரிகள் தினமும் அகலக்கோட்டை கிராமத்திற்கு வந்து அதிகளவில் மலர் செடி நாற்றுகளை கொள்முதல் செய்து செல்கின்றனர். இதனால் ஓசூர் பகுதியில் மலர் செடிகளின் விற்பனை அமோகமாக உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.