சேலம் மாநகராட்சி 21-வது வார்டில் சுகாதார சீர்கேட்டை தடுக்க சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேலம் மாநகராட்சி 21-வது வார்டில் நிலவும் சுகாதார சீர்கேட்டை தடுக்க சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Update: 2023-02-26 20:44 GMT

21-வது வார்டு

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 21-வது வார்டில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த வார்டில் 14 ஆயிரத்து 550 வாக்காளர்கள் உள்ளனர்.

பழைய சூரமங்கலம், அரியாகவுண்டம்பட்டி, பெரியார் தெரு, சோளம்பள்ளம், வீரகாளியம்மன் நகர், புதுரோடு, எம்.ஜி.ஆர். நகர், இந்திரா நகர், அண்ணா நகர், ரெயில் நகர், கமலா நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகள் இந்த வார்டில் அமைந்துள்ளன. சோளம்பள்ளம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அரியாகவுண்டம்பட்டி தொடக்கப்பள்ளி ஆகிய 2 அரசு பள்ளிகளும், அரசு உதவி பெறும் ராமலிங்கம் வள்ளலார் மேல்நிலைப்பள்ளியும் உள்ளன.

மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஜனார்த்தனும், தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெருமாள் என்பவரும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.ஜனார்த்தனன் வெற்றி பெற்று கவுன்சிலராக உள்ளார். இவரது தந்தை வெங்கடாஜலம் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமுதாய கூடம்

21-வது வார்டை பொறுத்தவரையில் பெரும்பாலான பகுதிகளில் சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. ஒருசில இடங்களில் மட்டும் சாக்கடை கால்வாய், தெருவிளக்கு, தண்ணீர் வசதி தேவைப்படுகிறது. பாண்டியன் தெருவில் பழுதடைந்த நிலையில் காணப்படும் சுகாதார வளாகத்தை இடித்துவிட்டு அங்கு சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தினமும் வீதி, வீதியாக குப்பைகள் சேகரிக்கும் பணிகளும் நடந்து வந்தாலும், போதுமான தூய்மை பணியாளர்கள் இல்லை.

குறிப்பாக இந்திரா நகர், கபிலர் தெரு, ஈ.ஆர்.கே.காலனி முதல் அண்ணாமலை லைன் பகுதி வரையிலும் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால் அங்கு சுகாதார சீர்கேடு நிலவி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

இந்த வார்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

சாக்கடை கால்வாய்

இல்லத்தரசி அருணா (கபிலர் தெரு):- எங்கள் தெருவில் உள்ள சாக்கடை கால்வாய் பெயர்ந்து உள்ளதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. சமீபத்தில் ஒரு குழந்தை சாக்கடை கால்வாயில் தவறி விழுந்துவிட்டது. பின்னர் அந்த குழந்தையை பொதுமக்கள் பார்த்து மீட்டனர். ஈ.ஆர்.கே. காலனியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் எதுவும் இல்லை. இதனால் குடியிருப்பை சுற்றிலும் கழிவுநீர் செல்லமுடியாமல் தேங்கி உள்ளது. இதுபற்றி கவுன்சிலரிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சாக்கடை கால்வாயை இடித்துவிட்டு புதிதாக அமைத்து கொடுக்க வேண்டும்.

புதிய ரேஷன் கடை

வெள்ளி வியாபாரி பெருமாள்(அரியாகவுண்டம்பட்டி):- எங்கள் பகுதியில் ஒரு ரேஷன் கடை மட்டுமே உள்ளதால் பொதுமக்களின் வசதிக்காக புதிதாக காளியம்மன் நகரில் ரேஷன் கடை ஏற்படுத்த வேண்டும். லட்சுமி தியேட்டர் பின்புறம் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். அதேபோல், பழைய சூரமங்கலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் 21-வது வார்டுக்கு தேவையான நிதியை மாநகராட்சி ஒதுக்கீடு செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும்.

வீடுகள் ஒதுக்கீடு

மூதாட்டி கந்தம்மாள்:- அரியாகவுண்டம்பட்டியில் 13 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்தோம். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ.25 கோடியில் வெள்ளி கொலுசு உற்பத்தி பன்மாடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக எங்களது வீடுகள் இடையூறாக இருப்பதாக கூறி அதிகாரிகள் வேறு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். நாங்கள் வீடுகளை காலிசெய்துவிட்டு சென்றோம். அப்போது, மாற்று இடங்கள் அல்லது வீடுகள் ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்தனர். ஆனால் இதுவரை எங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கவில்லை. எனவே, அதிகாரிகள் கூறியது மாதிரி நாங்கள் வசிக்க இடங்களை கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சுடுகாடு வசதி

இல்லத்தரசி அலமேலு (இந்திரா நகர்):- எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி அகலமாக இல்லாதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. எனவே, சாக்கடை கால்வாய் வசதி செய்து கொடுக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் 1997-ம் ஆண்டு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. அதில் இருந்து நாங்கள் வீட்டு பயன்பாட்டுக்கு தண்ணீரை பிடித்து வருகிறோம். ஆனால் தண்ணீர் தொட்டி பகுதியில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழியில்லாமல் உள்ளதால் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. எனவே தண்ணீர் தொட்டியை சீரமைத்து சாக்கடை கால்வாய் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் சுடுகாட்டில் போதுமான வசதி இல்லை. திறந்த வெளியில் தான் இறந்தவர்களின் உடல்களை புதைக்கிறோம். எனவே புதிய தகன மேடை அமைத்து தண்ணீர் வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

என்ன சொல்கிறார் கவுன்சிலர்?

அ.தி.மு.க.வை சேர்ந்த 21-வது வார்டு கவுன்சிலர் வி.ஜனார்த்தனன் கூறும் போது, 'மாநகராட்சி நிதியை எதிர்பாராமல் சொந்த பணத்தில் வார்டு மக்களுக்கு பல்வேறு தேவைகளை செய்து கொடுத்து வருகிறேன். இந்திரா நகரில் ரூ.15 லட்சத்தில் சுகாதார வளாகம், வீரகாளியம்மன் கோவில் தெருவில் அங்கன்வாடி மையம், சோளம்பள்ளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம், அரியாகவுண்டம்பட்டி பள்ளிக்கூடத்தில் சுற்றுச்சுவர் அமைத்து வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. பாண்டியன் தெருவில் வசிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு சமுதாய கூடம் அமைக்க வேண்டும். அதற்கு தேவையான இடமும் இருக்கிறது. பழைய சூரமங்கலம் மெயின்ரோடு, மாநகராட்சி மருத்துவமனை, உயர்நிலைப்பள்ளிகள், வாரச்சந்தை, அம்மா உணவகம், சூரமங்கலம் மண்டல அலுவலகம் உள்ளிட்டவை 21-வது வார்டு எல்லைக்கு உட்பட்டது ஆகும். ஆனால் 20-வது வார்டு கவுன்சிலர் அத்துமீறி அந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறார். இதுகுறித்து மாநகராட்சி மேயர், ஆணையாளருக்கு கடிதம் கொடுத்துள்ளேன். ஆனால் எல்லை வரையறை செய்யாமல் உள்ளது. அதனை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். சுகாதார பணிகள் மேற்கொள்ள கூடுதல் தூய்மை பணியாளர்களை ஒதுக்க வேண்டும். வார்டு மக்கள் கூறும் பிரச்சினைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறேன்'என்றார்.

வார்டு மக்களுக்கு வேண்டியவை

* சாக்கடை கால்வாய் வசதி

* புதிய சமுதாய கூடம்

* இந்திரா நகரில் சுடுகாடு வசதி

* நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

* தேவையான இடங்களில் சாலை வசதி

* ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து தண்ணீர் தொட்டி அமைத்தல்

மேலும் செய்திகள்