சிறப்பு முகாமில் ஒரே நாளில் 90,513 பேருக்கு தடுப்பூசி கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் சேலம் மாவட்டம் முதலிடம் சுகாதாரத்துறை தகவல்
சேலம் மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் ஒரே நாளில் 90,513 பேருக்கு தடுப்பூசி செலுத்தி சேலம் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சேலம்,
தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாதம் ஒரு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட 28 லட்சத்து 84 ஆயிரத்து 643 பேருக்கு முதல் தவணையும், 24 லட்சத்து 46 ஆயிரத்து 11 பேருக்கு 2-ம் தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 95 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 81 சதவீதம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் இதுவரை 30 தடுப்பூசி மெகா முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 8 லட்சத்து 2 ஆயிரத்து 820 பேருக்கு முதல் தவணை, 11 லட்சத்து 64 ஆயிரத்து 655 பேருக்கு 2-ம் தவணை என மொத்தம் 19 லட்சத்து 83 ஆயிரத்து 836 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம் முதலிடம்
அதன்படி, சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஊரகப்பகுதியில் 4,610, மாநகராட்சி பகுதியில் 630 என மொத்தம் 5,240 இடங்களில் 31-வது சிறப்பு தடுப்பூசி மெகா முகாம்கள் நடந்தன. இந்த பணியில் 19 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று முன்தினம் நடந்த 31-வது சிறப்பு மெக முகாமில் 5,148 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 82,712 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும், 2,678 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் என மொத்தம் 90 ஆயிரத்து 538 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சேலம் முதல் இடத்திலும், திருப்பூர் கடைசி இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.