மனைவி, மாமியார் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு:தொழிலாளிக்கு 13 ஆண்டுகள் சிறை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
மனைவி, மாமியார் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொழிலாளிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சேலம்:
மனைவி, மாமியார் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொழிலாளிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தொழிலாளி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி (வயது 34), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. அவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக தமிழரசி கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இதனிடையே தமிழரசி ஆத்தூரில் உள்ள மகளிர் சுய உதவி குழு மூலம் ரூ.40 ஆயிரம் பெற்று சிவசுப்பிரமணிக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் அந்த பணத்தை கணவரிடம் இருந்து பெறுவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி தமிழரசி தனது தாய் தனலட்சுமி (55), தம்பி ராஜ்குமார் ஆகியோருடன் கணவர் வீட்டுக்கு சென்றார்.
சிறை தண்டனை
அப்போது அவர்களுக்கும், சிவசுப்பிரமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த அரிவாளால் தமிழரசி, தனலட்சுமி, ராஜ்குமார் ஆகியோரை வெட்டினார். இதில் காயம் அடைந்த அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். மேலும் இதுதொடர்பாக ஆத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தனலட்சுமி புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசுப்பிரமணியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதன்படி மனைவி, மாமியார் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக சிவசுப்பிரமணிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.