களைகட்டிய பொங்கல் பண்டிகை பொருட்கள் விற்பனை: அறுவடை முடிந்து விற்பனைக்காக குவிந்த மஞ்சள் கொத்துகள் மண்பானைகளையும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்

பொங்கல் பண்டிகைக்கான மஞ்சள் கொத்துகள் அறுவடை முடிந்து விற்பனைக்காக வந்து குவிந்துள்ளது. மண்பானைகளும் அதிகளவில் விற்பனைக்காக வந்துள்ளதால், பண்டிகைகால பொருட்கள் விற்பனை களைக்கட்ட தொடங்கி இருக்கிறது.

Update: 2023-01-13 19:50 GMT

ராமநத்தம், 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை(ஞாயிற்றக்கிழமை) உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையில் இனிக்கும் கரும்புக்கும், அதற்கு அடுத்தபடியாக மங்கல பொருட்களில் ஒன்றான இலைகளுடன் கூடிய மஞ்சள் கொத்துக்கும் தனி இடம் உண்டு.

இதை எதிர்நோக்கி, கடலூர் மாவட்டம் சிறுபாக்கம், ராமநத்தம் பகுதியில் அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. மஞ்சள் ஈரோடு 1, எருமதலி மற்றும் நாட்டு ரக செடிகளை சாகுபடி செய்திருந்தனர். மஞ்சள் செடிகளை வாரச்சந்தை மூலம் மஞ்சள் கொத்துகளாக விற்றும், மிஞ்சிய மஞ்சள் கிழங்குகளை பதப்படுத்தி ஈரோடு மார்க்கெட்டிலும் விற்று விவசாயிகள் வருவாய் ஈட்டுகின்றனர்.

புதிதுபுதிதாக முளைத்த கடைகள்

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், மஞ்சள் கொத்து அறுவடை தொடங்கி சந்தைக்கு விற்பனைக்கு வர தொடங்கி இருக்கிறது.

அதன்படி ராமநத்தம் பகுதி மற்றும் அருகே உள்ள பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிகாடு, பெரும்புத்தூர், நல்லூர் ஆகிய பகுதியில் அறுவடை செய்யப்படும் மஞ்சள் ராமநத்தம் கடைவீதிக்கு விற்பனைக்காக வந்து கொண்டிருக்கிறது.

இதனால், ராமநத்தத்தில் ஆத்தூர் செல்லும் சாலையில் மழைக்கு முளைத்த காளான்கள் போன்று சாலையோரம் புதிதுபுதிதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடைகளை விரித்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால், சாலையில் எங்கும் மஞ்சள் கொத்துகளும், கரும்புகள், தேங்காய்கள், பழங்களுமாக நிரம்பி இருக்கிறது. சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் இங்கு வந்து செல்கிறார்கள். ஒரு மஞ்சள் கொத்து ரூ.25 முதல் 30 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மண்பானைகள்

இதேபோன்று பொங்கல் பண்டிகையில் முக்கியத்துவம் பெறும் மண்பானைகள் விற்பனையும் களைக்கட்டி இருக்கிறது. நெய்வேலி அருகே சென்னை- கும்பகோணம் சாலையில் வடக்குத்தில் மண்பானைகள், மண் அடுப்புகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்களும் வாங்கி செல்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்