கீரமங்கலம், கொத்தமங்கலம் பகுதியில் மரக்கன்றுகள் விற்பனை மும்முரம்

கீரமங்கலம், கொத்தமங்கலம் பகுதியில் கன மழை பெய்துள்ளதால் மரக்கன்றுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-09-10 18:09 GMT

புயலில் அழிந்த மரங்கள்

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி அதிகாலை கஜா புயல் தாக்கியது. புயலின் தாக்கத்தால் கீரமங்கலம், கொத்தமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மா, பலா, தேக்கு, தென்னை உள்பட பல லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்து விவசாயிகளை நிலைக்குலைய செய்தது.

நூற்றாண்டு பழமைவாய்ந்த மரங்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அதன் பிறகு அழிந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க தொடங்கியுள்ளனர். மேலும் அதிகமான மரங்களை வளர்க்கும் முயற்சியாக திருமணம், காதணி உள்ளிட்ட விழாக்கள் அரசு, தனியார் விழாக்களிலும் மரக்கன்றுகள், விதைப்பந்துகள் வழங்குவதும் தொடர்ந்து நடக்கிறது.

மரக்கன்றுகள் விற்பனை

கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துள்ள நிலையில் வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகள் மரக்கன்றுகள், தேக்கு கிழங்கு விற்பனை செய்ய வந்துள்ளனர். கீரமங்கலம், கொத்தமங்கலம் சுற்றியுள்ள விவசாயிகள் தேக்கு, சந்தனம் உள்ளிட்ட மரக்கன்றுகளை வாங்கி தோட்டங்களில் நடவு செய்து வருகின்றனர்.

மேலும் சில மாதங்களுக்கு தேக்கு கிழங்கு விற்பனை மும்முரமாக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்