சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட தேசிய கொடி விற்பனை
75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட தேசிய கொடி விற்பனையை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்றிடும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட தேசிய கொடி விற்பனை தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி தேசிய கொடி விற்பனையை தொடங்கி வைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கி பேசுகையில், இந்திய திருநாடு சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டு சுதந்திர தின அமுதப்பெருவிழாவாக நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படஉள்ளது. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் அதாவது அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப்பகுதிகளிலும் உள்ள ஒரு வீடு கூடாத விடுபடாத வகையில் அனைத்து வீடுகளிலும் இன்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை 3 நாட்களுக்கு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். இதற்காக பொதுமக்கள், தேசிய கொடியை எளிதாக பெற்றிடும் வகையில் தபால் நிலையம், வணிக நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகிய இடங்களில் ஒரு தேசியக்கொடி ரூ.21-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் 4,40,530 வீடுகளுக்கும் கொடிகள் வழங்க தயாராக உள்ளன. அதேபோல் நகராட்சி, பேரூராட்சியிலும் தேசிய கொடிகள் தயாராக உள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.