நிலக்கடலை விற்பனை மந்தம்

ராமநாதபுரத்தில் நிலக்கடலை விற்பனை மந்தமாகி உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-04-19 18:45 GMT

ராமநாதபுரத்தில் நிலக்கடலை விற்பனை மந்தமாகி உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

நிலக்கடலை

நெல், மிளகாய், பருத்தி போன்ற பயிர்களுக்கு அடுத்தபடியாக விவசாயிகளுக்கு கைகொடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நிலக்கடலை ஆகும். தமிழகத்தில் மானாவாரியாகவும், பாசன பயிராகவும் நிலக்கடலை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் விளைந்து கட்டுபடியாகும் விலை கிடைப்பதால் நிலக்கடலை சாகுபடிக்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

மாவட்டத்திற்கு மதுரை போன்ற பகுதிகளில் இருந்து நிலக்கடலை விற்பனைக்கு வருகிறது. இந்த நிலக்கடலையை வியாபாரிகள் மூடைகளாக வாங்கி சில்லரையாக விற்பனை செய்து வருகின்றனர். அனைவராலும் விரும்பி சாப்பிடும் உணவாக நிலக்கடலை உள்ளதால் நிலக்கடலை விற்பனை என்பது எப்போதும் கைகொடுக்கும் வியாபாராமாகவே இருந்து வருகிறது.

விற்பனை மந்தம்

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக ராமநாதபுரத்தில் தற்போது நிலக்கடலை விற்பனை மந்தமாகி உள்ளது.

தினமும் நடைபெறும் வியாபாரமாகட்டும், சந்தை சமயத்தில் நடைபெறும் வியாபாரமாகட்டும் ஏராளமான வியாபாரிகள் நிலக்கடலையை கொட்டி படிகளில் அளந்து ஆர்வமுடன் விற்பனை செய்து வந்தனர். ஆனால், கடந்த சில தினங்களாக கொட்டிய நிலக்கடலை விற்பனையாகாமலேயே திருப்பி கொண்டுபோகும் நிலை உள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் அம்மன்கோவில் பகுதியை சேர்ந்த நிலக்கடலை வியாபாரி பஞ்சவர்ணம் கூறியதாவது:- நான் கடந்த 10 ஆண்டுகளாக நிலக்கடலை வியாபாரம் செய்து வருகிறேன். மதுரையில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறேன். இந்த ஆண்டு நிலக்கடலை விலை ஒரு படி ரூ.60 வரை விற்பனையாகி வருகிறது. விலையில் எந்த மாற்றமும் இல்லாதபோதும் விற்பனையாகவில்லை. தற்போது ரமலான் மாத நோன்பு சமயம் என்பதால் நிலக்கடலை விற்பனை குறைந்துவிட்டது. ரமலான் பண்டிகை முடிந்தால்தான் விற்பனை நன்றாக இருக்கும் என்றார். நிலக்கடலை விற்பனை குறைந்துவிட்டதால் அதனை நம்பி உள்ள வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்