பக்ரீத் பண்டிகையையொட்டி தியாகதுருகம் சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி தியாகதுருகம் சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது.

Update: 2023-06-24 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் வருகிற 29-ந்தேதி முஸ்லீம்கள் பக்ரீத் பண்டிகை என்பதால், இதையொட்டி, நேற்று நடந்த வாரச்சந்தைக்கு வழக்கத்தை விட, அதிக ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்காக ஓட்டிவந்திருந்தனர்.

ஆடுகளை உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் முஸ்லீம்கள் பலரும் போட்டிப்போட்டு வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், பக்ரீத் பண்டிகையையொட்டி கூடுதல் விலைக்கு ஆடுகளை விற்கலாம் என விவசாயிகள் பலரும் தங்களது ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சந்தையில் வியாபாரிகளும், முஸ்லீம்களும் ஆடுகளை போட்டிப்போட்டு ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். வாரச்சந்தையில் ஆடு குறைந்த விலையாக ரூ.8 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.26 ஆயிரம் வரை விற்பனையானது. ஆட்டுக்குட்டி ரூ.4 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

பக்ரீத் பண்டிகையையொட்டி வழக்கமாக சந்தைக்கு வரும் ஆடுகளை விட கூடுதலான ஆடுகள் சந்தைக்கு வந்தன. வந்த ஆடுகள் அனைத்தும் சுமார் 3 மணி நேரத்தில் விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் சுமார் 75 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்று இருக்கலாம் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்