'தினத்தந்தி' செய்தி எதிரொலி: கள்ளிப்பட்டி அரசு பள்ளிக்கூடம் அருகே வேகத்தடை அமைப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: கள்ளிப்பட்டி அரசு பள்ளிக்கூடம் அருகே வேகத்தடை அமைப்பு
டி.என்.பாளையம்
டி.என்.பாளையத்தை அடுத்த அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் பள்ளிக்கூட மாணவிகள் 2 பேர் மீது லாரி மோதியதில் கை-கால் முறிவு ஏற்பட்டது. சில நேரம் உயிர் சேத சம்பவமும் நடந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அத்தாணி-சத்தியமங்கலம் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியாகி இருந்தது.
இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள், பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.