மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; கைத்தறி கூட்டுறவு சங்க மேலாளர் பலி
கபிலர்மலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கைத்தறி கூட்டுறவு சங்க மேலாளர் இறந்தார்.
பரமத்திவேலூர்
கைத்தறி கூட்டுறவு சங்க மேலாளர்
கபிலர்மலை வடக்கு தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 57). கபிலர்மலையில் உள்ள தமிழ்நாடு கைத்தறி கூட்டுறவு சங்க மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று நாமக்கல் சென்றுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் கபிலர்மலைக்கு செல்ல பரமத்தியில் இருந்து கபிலர்மலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இருக்கூர் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், ரத்தினவேல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ரத்தினவேலை அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ரத்தினவேல் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மற்றொருவர் படுகாயம்
தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து படுகாயம் அடைந்த ஜேடர்பாளையம், சரளைமேட்டை சேர்ந்த ராஜு மகன் சதீஷ்குமார் (31) என்பவரை நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் பலியான ரத்தினவேலுக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.