100 கிடாய், 800 சேவல்களை பலியிட்டு பூஜை

கொட்டாம்பட்டி அருகே கோவிலில் ஆடி படையல் விழாவையொட்டி 100 கிடாய், 800 சேவல்களை பலியிட்டு பூஜை நடத்தப்பட்டது. உப்பு, வேப்பிலையை பயன்படுத்தி சமைத்து ஆண்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.

Update: 2023-07-31 19:52 GMT

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே கோவிலில் ஆடி படையல் விழாவையொட்டி 100 கிடாய், 800 சேவல்களை பலியிட்டு பூஜை நடத்தப்பட்டது. உப்பு, வேப்பிலையை பயன்படுத்தி சமைத்து ஆண்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.

ஆடி படையல் விழா

கொட்டாம்பட்டி அருகே உள்ள வீரசூடாமணிபட்டி, சுந்தர்ராஜபுரம், கச்சிராயன்பட்டி ஆகிய 3 கிராமங்களுக்கு சொந்தமான ஐந்து முளி சுவாமி கோவில் கல்லு படையல் ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும். இந்த ஆண்டு ஐந்து முளி சுவாமி ஆடி கல்லு படையல் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடனுக்காக விடப்பட்ட 100 கிடாய் மற்றும் 800 சேவல்களை கோவில் அருகே பலியிட்டனர்.

பின்னர் 3 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கிராம பெரியவர்கள், ஆண்கள் மட்டுமே பலியிடப்பட்ட கிடாய், சேவல்களை சுத்தம் செய்து தீயில் வாட்டி வெட்டினர். அனைத்தும் வெட்டிய பின்பு வரிசையாக அமைக்கபட்டு இருக்கும் அடுப்பில் மண் கலயத்தில் சுத்தம் செய்த கறியை தண்ணீருடன் உப்பு, வேப்ப இைலகள் போட்டு சமைத்து கோவிலின் முன்பு சுவாமிக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்தனர்.

படையல்

இந்த படையல் நிகழ்ச்சியில் பக்கத்து ஊரில் இருந்து வரவழைக்கப்பட்ட முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை அதாவது சர்க்கரை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

படையல் பூஜைகள் முடிந்த பின்னர் ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் விருந்தில் கலந்து கொள்ளலாம். விருந்தில் உப்பு, வேப்ப இலைகளால் மட்டுமே சமைக்கப்பட்ட கறி மட்டுமே பரிமாறப்படும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்