திறனறி பயிற்சி பெற கிராமப்புற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திறனறி பயிற்சி பெற கிராமப்புற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Update: 2022-12-01 18:45 GMT

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திறனறி பயிற்சி பெற கிராமப்புற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் கூறி இருப்பதாவது:-

பயிற்சித்திட்டம்

மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறைகள் செயல்பட்டு வரும் ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. சென்னை நீங்கலாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொழில்பிரிவுகள்

இத்திட்டத்தின் கீழ் சுகாதார பராமரிப்பு, ஆயத்த ஆடை வடிவமைப்பு, ஆட்டோ மொபைல், சில்லறை வணிகம், தளவாடங்கள், கட்டுமானத்துறை, அழகு கலை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பிரிவுகளில் வேலை வாய்ப்பு பெற இயலும். 120-க்கும் மேற்பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தது 3 அல்லது 6 மாதங்கள் கொண்ட குறுகிய கால பயிற்சிகள், உணவு தங்குமிடம், சீருடை, பயிற்சி உபகரணங்கள், கணினி பயிற்சி மற்றும் பயிற்சிக்கு பின் பயிற்சி சான்றிதழ் ஆகிய வசதிகளுடன் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு பின் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

விருப்பமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சிக்கு ஏற்ப சில இடங்களில் அயல்நாடுகளிலும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. பயிற்சி அளிப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் 120 பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மொத்தம் 28,740 பேருக்கு பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விணணப்பிக்கலாம்

எனவே இத்திட்டத்தின் கீழ் பயிற்சிபெற விரும்பும் இளைஞர்கள் தமிழ்நாடு மாநில அரசு வாழ்வாதார இயக்கத்தின் அலுவலகத்தையோ அல்லது ஒவ்வொரு வட்டாரத்திலும் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்