ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்

சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது.

Update: 2023-09-13 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது.

வேலை நிறுத்தம்

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒருங்கிணைப்பாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஊதியத்தினை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக வழங்க வேண்டும், அனைத்து நிலை பதவி உயர்வுகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலைநிறுத்தம் போராட்டம் செய்வதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஆணையர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், இளம் நிலை உதவியாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையானோர் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்டம், வீடு கட்டும் பணிகள், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வருகை தந்த பொதுமக்கள் அதிகாரிகள் இல்லாததால் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர். இதனால் பொதுமக்களின் பணி பாதிக்கப்பட்டது.

கொள்ளிடம்

இதேபோல் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள்,கணினி உதவியாளர்கள் உள்ளிட்ட 58 பேர் மற்றும் கொள்ளிடம் ஒன்றியத்தை 42 ஊராட்சி செயலாளர்களும் பணிக்கு வராததால் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. வேலை நிறுத்தத்தால் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் நடைபெற வேண்டிய அனைத்து பணிகளும் நேற்று நடைபெறவில்லை.   

Tags:    

மேலும் செய்திகள்