ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்

நாகர்கோவிலில் 1 மணி நேரம் பணியை புறக்கணித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-04 20:46 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் 1 மணி நேரம் பணியை புறக்கணித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

குமரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 1 மணி நேரம் பணியை புறக்கணித்து போராட்டம் நடந்தது.

தூய்மை பாரத இயக்க மாவட்டம் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும், பணியை வரன் முறைப்படுத்துதல் வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு அனைத்து தாலுகாக்களிலும் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடத்தை உடனடியாக உருவாக்க வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதிகளை மேலும் காலதாமதமின்றி வெளியிட்டு, விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணைகளை வெளியிட்டு, அனைவருக்கும் உடனடியாக உயர்த்தப்பட்ட விகிதத்தில் ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், இணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவி செயற் பொறியாளர் உள்ளிட்ட நிலையிலான அனைத்து பதவி உயர்வு ஆணைகளை காலதாமதமின்றி உடனடியாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

அலுவலகம் வெறிச்சோடியது

அதன்படி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் நேற்று மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை பணியை புறக்கணித்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் விஜி தலைமை தாங்கினார்.

போராட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்பினர். ஊழியர்களின் போராட்ட சமயத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் ஒரு மணி நேரம் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்