ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

Update: 2022-07-26 16:46 GMT


திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை செம்மைப்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

உடற்திறன் தேர்வு போட்டி

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் உலக திறனாய்வு உடற்திறன் தேர்வு போட்டிகள் நேற்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்து பேசியதாவது:-

அரசு பள்ளியில் 6,7,8-ம் வகுப்பு மாணவர்கள் படிப்பு மட்டும் இல்லாமல் விளையாட்டுகளிலும் தங்களுடைய திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக திறனாய்வு உடற்திறன் போட்டிகள் நடத்தப்படுகிறது. மாணவர்கள் விளையாட்டு துறையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டிலேயே அதிகமாக மாணவிகள் படிக்கும் அரசுப்பள்ளியாக ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தனிச்சிறப்பு பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் சில பள்ளிகளை செம்மைப்படுத்தும் பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிப்படை வசதிகள், ஆய்வக வசதிகள் மற்றும் ஒருங்கிணைந்த அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இந்த பள்ளி பெருமையாக பேசப்படும் பள்ளியாக அமையும்.

விளையாட்டு வீரர்களால் பெருமை

மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும். விளையாட்டில் பங்கேற்கும் மாணவர்கள் சுறுசுறுப்புடன், ஞாபக சக்தியுடன் இருக்க முடியும். பேட்டரி டெஸ்ட் என்ற மாணவர்களுக்கான விளையாட்டு திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான செயலியும் வெளியிடப்பட்டுள்ளது. நமது நாட்டிற்கு பெருமையை தேடித்தருபவர்கள் விளையாட்டு வீரர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடாமுயற்சி

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

தனியார் பள்ளிகளை விட அரசு மற்றும் மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது. விடா முயற்சி செய்தால் விளையாட்டில் வெற்றி நிச்சயம். மாணவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பெற்றோர் சிரமப்பட்டு தங்களை படிக்க வைக்கிறார்கள் என்பதை மாணவர்கள் உணர்ந்து படிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பள்ளிக்கல்வித்துறை ஆணையாளர் நந்தகுமார், தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், தி.மு.க. தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், விகாஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

-----


மேலும் செய்திகள்