திருப்பூர் மாவட்ட ஊராட்சி பகுதியில் ரூ.1 கோடியே 90 லட்சத்தில் பணிகள் விரைவில் மேற்கொள்ள ஒப்புதல் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. மேலும் 5 நிலைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது.
ரூ.1 கோடியே 90 லட்சத்தில் பணிகள்
திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் சத்தியபாமா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளி கண்ணன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தங்கள் துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.
கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு தீர்மானமாக வைக்கப்பட்டு இருந்தது. 2022-23-ம் ஆண்டுக்கு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களுக்கு தலா ரூ.10 லட்சத்தில் அவர்கள் வார்டுகளில் பணி செய்ய ரூ.1 கோடியே 90 லட்சம் ஒப்புதல் வழங்கப்பட்டது. பள்ளிகளுக்கு மேஜை, பெஞ்சுகள், குடிநீர் மேல்நிலைத்தொட்டிகள், வடிகால் பணிகள், சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
ஆடுகளை வேட்டையாடும் நாய்கள்
கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், தெருநாய் தொந்தரவு அதிகம் உள்ளது. ஆடுகளை வேட்டையாடுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஏற்கனவே கோவில் கட்டி இருந்த நிலையில் அதை அகற்றுமாறு ஊராட்சி நிர்வாகம் கூறுகிறது. கோவில் அமைப்பதற்கான அனுமதி குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தில் கோவில் இருந்து, அந்த ஊராட்சியின் தேவைக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கும், சாலைகள் விரிவாக்க பணிக்கும் அந்த இடம் தேவைப்படும் பட்சத்தில் கோவிலை அகற்ற வேண்டும். மேலும் கோவில் அமைப்பதற்கு மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறுவது அவசியம். நீர்வழிப்புறம்போக்கில் எந்தவித கட்டிடமும் இருக்க அனுமதியில்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினார்கள்.
5 நிலைக்குழுக்கள்
கூட்டத்தில் தலைவர் சத்தியபாமா பேசியதாவது:-
திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழுவில் ரூ.10 கோடியே 95 லட்சம் இருப்பில் உள்ளது. அதில் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு ரூ.6 கோடியே 7 லட்சம் வழங்கப்பட உள்ளது. மீதம் உள்ள ரூ.4 கோடியே 88 லட்சத்தில் ரூ.1 கோடியே 90 லட்சத்தில் பணிகள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூ.2 கோடியே 98 லட்சத்தில் 50 சதவீத தொகையில் மட்டுமே பணியை செய்ய முடியும். அதற்காக ஒவ்வொரு கவுன்சிலரும் மேலும் ரூ.10 லட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை தேர்வு செய்து தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கூட்டத்தில் 5 நிலைக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உறுப்பினராக உள்ளார். மேலும் 3 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி உணவு மேலாண்மைக்குழு தலைவராக சாமிநாதன், தொழிலாளர் குழு தலைவராக ஜனார்த்தனன், பொதுப்பணிக்குழு தலைவராக ஜெயந்தி, கல்விக்குழு தலைவராக மலர்விழி, சுகாதாரக்குழு தலைவராக ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.