வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கட்டுகட்டாக பணம் சிக்கியது

Update: 2023-03-15 16:21 GMT


லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் திருப்பூர் வட்டார ேபாக்குவரத்து அலுவலகத்தில் கட்டு கட்டமாக பணம் சிக்கியது. பத்திரப்பதிவு அலுவலகத்திலும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பத்திரப்பதிவுத்துறை

தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவுத்துறை, வட்டார போக்குவரத்துத்துறை உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். திருப்பூர் நெருப்பெரிச்சலில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று பத்திரப்பதிவு பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது மதியம் 2 மணிக்கு திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சணாமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் சசிலேகா உள்ளிட்ட போலீசார் வந்தனர். பின்னர் அதிரடியாக அலுவலகத்திற்குள் புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அலுவலகத்தில் இருந்த பத்திர எழுத்தர்கள், பொதுமக்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பொதுமக்கள் சிலர் பணம் வைத்திருந்தனர். ஆனால் அவர்கள் வேறு பணி நிமித்தமாக பணம் வைத்திருப்பதாக கூறியதால், பொதுமக்கள் அனைவரையும் போலீசார் அங்கிருந்து வெளியேற்றினார்.

இதையடுத்து பணியில் இருந்த பதிவாளர், சார் பதிவாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. 5 மணி நேரமாக அங்கு தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

வட்டார போக்குவரத்து அலுவலகம்

இதேபோல் திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் உள்ள வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு 10 நிமிடம் மட்டுமே சோதனை நடைபெற்ற நிலையில், போலீசார் அங்கிருந்து புறப்பட்டு வஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்தமான மைதானத்திற்கு சென்றனர். அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், புரோக்கர்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் சோதனை நடத்தி, விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.1½ லட்சம் அங்கிருந்து கைப்பற்றதாக கூறப்படுகிறது. இரவு 10 மணி வரை தொடர்ந்து அங்கு சோதனை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்