'ஓலா கேப்ஸ்' நிறுவனம் ரூ.55 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்

Update: 2022-06-29 16:05 GMT


9.21 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.998 வசூலித்த ஓலா கேப்ஸ் நிறுவனம் பயணிக்கு ரூ.55 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

வாடகை கார் கட்டணம் அதிகம்

திருப்பூரை சேர்ந்தவர் மோகனபாரதி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஓலா கேப்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான காரை வாடகைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து 9.21 கிலோ மீட்டர் தூரம் சென்றார். ஆனால் அதற்கு கட்டணமாக ரூ.998 வசூலிக்கப்பட்டது. அதன்பிறகு மற்றொரு வாடகை காரில் திரும்பியபோது ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து 2020-ம் ஆண்டு மோகனபாரதி திருப்பூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணையின்போது எதிர் தரப்பினர் ஆஜராகவில்லை.

இதைத்தொடர்ந்து மோகனபாரதிக்கு ரூ.600-ஐ 12 சதவீத வட்டியுடன் வழங்கவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு ரூ.50 ஆயிரம், வழக்கு செலவுத்தொகை ரூ.5 ஆயிரம் சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

இருசக்கர வாகன பழுது நீக்கிய தொகை

திருப்பூர் காலேஜ் ரோட்டை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கோவை புல்மேன் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கினார். அந்த மோட்டார் சைக்கிளை சர்வீஸ் செய்ய கடந்த 2020-ம் ஆண்டு பாலமுருகன் கோவையில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விட்டுள்ளார். ஆனால் சர்வீஸ் முடித்து ரூ.13 ஆயிரத்து 65 கட்டணம் வசூலித்துள்ளனர்.இதில் முன்சக்கரத்தின் ரிம் மாற்றியதாக ரசீதில் தெரிவித்திருந்தனர். ஆனால் ரிம்மை புதிதாக மாற்றவில்லை. அதுபோல் நன்றாக இருந்த பேட்டரியும் மாற்றப்பட்டு பழைய பேட்டரி இருந்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிய பதில் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து பாலமுருகன் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்கு தொடுத்தார். எதிர்தரப்பினர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனம், புதிய ரிம்முக்கான தொகை ரூ.1,327.50, சர்வீஸ் கட்டணம் ரூ.2,628, கோவைக்கு சென்று வந்த கட்டணம் ரூ.224 இவற்றை 12 சதவீத வட்டியுடன் செலுத்தவும், பாலமுருகனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு ரூ.1 லட்சம், வழக்கு செலவுத்தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று கோர்ட்டு தலைவர் தீபா, உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

மாற்றுத்திறனாளிக்கு நஷ்டஈடு

தாராபுரத்தை சேர்ந்தவர் முகமது யூசுப். மாற்றுத்திறனாளியான இவர் தாராபுரத்தில் உள்ள பிரியம் இண்டஸ்ட்ரீஸ் என்ஜினீயரிங் நிறுவனத்தில் இருந்து பேட்டரி பொருத்தப்பட்ட 3 சக்கர ஸ்கூட்டரை தவணைத்தொகை செலுத்தி கடந்த 2018-ம் ஆண்டு வாங்கினார். 6 மாதத்துக்குள் பேட்டரி பழுதடைந்து 15 கிலோ மீட்டர் மட்டுமே வாகனம் சென்றது. இதுகுறித்து முகமது யூசுப் கேட்டும் அந்த நிறுவனம் மாற்றிக்கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணையின் போது எதிர்தரப்பினர் ஆஜராகவில்லை.

இதைத்தொடர்ந்து முகமது யூசுப்புக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம், வாகனம் வாங்க செலுத்திய ரூ.26 ஆயிரத்தை 12 சதவீத வட்டியுடன் வழங்கவும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.1 லட்சம், வழக்கு செலவுத்தொகை ரூ.10 ஆயிரம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

சிட்பண்ட்ஸ் நிறுவனம்

திருப்பூரை சேர்ந்தவர் வானதிதேவி. இவர் திருப்பூர் கோகுலம் சிட்பண்ட்ஸ்சில் 2 சீட்டுகள் தலா ரூ.5 லட்சத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல்தவணைத்தொகை செலுத்தி வந்தார். 2020-ம் ஆண்டு முதிர்வு தொகை கொடுக்காமல் நிறுவனம் இழுத்து வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வானதிதேவி நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணையில் எதிர்தரப்பினர் ஆஜராகவில்லை.

இதைத்தொடர்ந்து சீட்டுத்தொகையான ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்தை 12 சதவீத வட்டியுடனும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.50 ஆயிரம், வழக்கு செலவுத்தொகை ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனம், வானதிதேவிக்கு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்