சேலத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெரு பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. இதனை வட தமிழகம் மாநில தலைவர் குமாரசுவாமி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே சீருடையில் அணி வகுத்து சென்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
ஊர்வலமானது கருங்கல்பட்டியில் இருந்து பிரபாத் வழியாக தாதகாப்பட்டி கேட் பகுதியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஊர்வலத்தின் முன்பாக பேண்டு, வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், உறுப்பினர்கள் கட்டுப்பாடுகளை மீறுகிறார்களா? என்று போலீசார் கண்காணித்தனர். இதனை தொடர்ந்து தாதகாப்பட்டி கேட் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், வட தமிழகம் மாநில தலைவர் குமாரசுவாமி கலந்து கொண்டு பேசினார்.
ஆத்தூர்
ஆத்தூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. ஓய்வு பெற்ற மருத்துவ அலுவலர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஜெயஆனந்த், மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன்பு இருந்து தொடங்கிய ஊர்வலம் ராணிப்பேட்டை கடைவீதி, தாயுமானவர் தெரு, அருணகிரிநாதர் தெரு, காமராஜர் ரோடு வழியாக புறப்பட்ட இடத்தை வந்தடைந்தது.
பின்னர் ஆத்தூர் ராணிப்பேட்டையில் மாநில பொறுப்பாளர் கல்யாண் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.