ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு; அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
ஏழைகள் பயன்பெறும் வகையில் ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
ஏழைகள் பயன்பெறும் வகையில் ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நெல்லையில் மாவட்ட அளவில் சிறப்பு கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா வரவேற்று பேசினார்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் 6,425 பேருக்கு ரூ.7 கோடியே 57 லட்சம் மானியத்துடன் ரூ.156 கோடியே 28 லட்சம் கடன் உதவி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
ரூ.7 லட்சம் கோடி
ஏழை-எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் என கடன் தேவைப்படுவோருக்கு வங்கிகள் உதவ வேண்டும். அந்த கடன் உதவி மூலம் சமுதாயம் ஏற்றம் பெறும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடப்பு ஆண்டில் ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இதன்மூலம் மாணவர்கள், தொழிலாளர்கள், சிறு-குறு தொழில் நிறுவனங்கள், பெண்கள், ஏழைகள் என ஏராளமானவர்கள் பயன் பெறுவர். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வங்கிகள் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல்வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் கிரகாம்பெல், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், ஒன்றிய செயலாளர் ஜோசப்பெல்சி, முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் நவநீதன், நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், களக்காடு நகராட்சி துணைத்தலைவர் பி.சி.ராஜன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமா மகேஸ்வரி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் ரவி, தாட்கோ மேலாளர் அய்யப்பன், மாவட்ட தொழில் மைய மேலாளர் சுவர்ணலதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன், மகளிர் திட்ட உதவி அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.