இறந்த காட்டு பன்றிகளை தீயில் வாட்டிய 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம்
சிறுவாச்சூரில் இறந்த காட்டு பன்றிகளை தீயில் வாட்டிய 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தலைமையில் பெரம்பலூர் வனச்சரகர் பழனிகுமரன், வனவர் குமார், வனக்காப்பாளர்கள் ரோஜா, ராஜூ, அன்பரசு ஆகியோர் அடங்கிய வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது சிறுவாச்சூர்-வேலூர் செல்லும் சாலையில் தனியார் மண்டபம் அருகே சாலையோர ஓடையில் இறந்து கிடந்த 2 காட்டு பன்றிகளை 2 பேர் தீயில் வாட்டி கொண்டிருந்தனர். இதனை கண்ட வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சிறுவாச்சூரை சேர்ந்த பொன்னுசாமி (வயது 48), மனோகரன் (34) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்த காட்டு பன்றிகளின் உடல்களையும், 2 இருசக்கர வாகனங்களையும் வனத்துறையினர் கைப்பற்றினர். இதையடுத்து அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதமாக விதித்து வசூலித்தனர். பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.