சேலம் மண்டலத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.40 கோடி கடனுதவி-கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தகவல்

சேலம் மண்டலத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.40 கோடி கடனுதவி வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு முதலீட்டு கழக கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-28 20:50 GMT

கலந்தாய்வு கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு முதலீட்டு கழக கூடுதல் தலைமை செயலாளரும், தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமையின் தலைவருமான ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சேலம் மண்டலத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலீட்டு கழக கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா பேசியதாவது:-

ரூ.40 கோடி கடனுதவி

தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக உயர்த்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், புதிதாக தொழில் தொடங்கும் மற்றும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும் பல்வேறு வகையான கடனுதவி திட்டங்கள் மூலம் ரூ.40 கோடி வரை காலக்கடன் மற்றும் அரசின் மானியமாக ரூ.1½ கோடி வரை வழங்கப்படுகிறது.

ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவற்றின் தொழில் விரிவாக்க திட்டத்திற்கு 5 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. எரிசக்தி மூலதனம் மற்றும் அதன் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தொழில்களின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை தொழில் முனைவோர் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.500 கோடி இலக்கு

இக்கூட்டத்தில் மண்டல வணிக வளர்ச்சி மேலாளர் மோகன் பேசும்போது,'சேலம் மாவட்டத்தில் நடந்து வரும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான சிறப்பு கடன் முகாமில் தற்போது வரை ரூ.100 கோடிக்கு கடனுதவி கோரி 40 விண்ணப்பங்கள் தொழில் முனைவோரிடமிருந்து பெறப்பட்டுள்ளன. சேலம் மண்டலத்திற்கு நடப்பு நிதியாண்டிற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் பட்டுவாடா தொகையாக ரூ.500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மண்டல மேலாளர் ராஜூ, கிளை மேலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சங்க தலைவர் கோவிந்தன், சேலம் உற்பத்தி குழு தலைவர் இளங்கோவன், இந்திய தொழில் வர்த்தக சபை சங்க தலைவர் கார்த்தி கந்தப்பன், சேலம் மண்டல பட்டயக் கணக்காளர் சங்க தலைவர் குமார் சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்