பெருந்துறை தொகுதியில் முன்னாள் அமைச்சர் தோப்புவெங்கடாசலம் முயற்சியால் ரூ.224 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நிறைவு

பெருந்துறை தொகுதியில் முன்னாள் அமைச்சர் தோப்புவெங்கடாசலம் முயற்சியால் ரூ.224 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

Update: 2022-06-22 21:19 GMT

பெருந்துறை:

பெருந்துறை தொகுதியில் முன்னாள் அமைச்சர் தோப்புவெங்கடாசலம் முயற்சியால் ரூ.224 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம்

பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட பெருந்துறை, ஊத்துக்குளி மற்றும் சென்னிமலை ஒன்றியத்தின் 4 ஊராட்சிப் பகுதிகளின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. இந்த திட்டத்தை பெருந்துறை தொகுதிக்கு கொண்டுவர, முழு முயற்சி எடுத்தவர் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆவார்.

ரூ.224 கோடி செலவில் கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த திட்டப்பணிகள் அனைத்தும், தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் மேற்பார்வையில் நடந்துள்ளது. திட்டப் பணிகள் அனைத்தும் முடிந்து, தொகுதி முழுவதும் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தரை மற்றும் மேல்நிலைத் தொட்டிகளில் கொடிவேரி குடிநீர் நிரப்பப்பட்டு, சோதனை ஓட்டங்களும் நடந்து முடிந்து விட்டன.

மக்களுக்கு அர்ப்பணிப்பு

இந்த திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் பெருந்துறை பவானி ரோடு சந்திப்பு, எம்.ஜி.ஆர். ரோட்டில் உள்ள சந்தைப்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள நீரேற்று நிலையத்தில் நடக்கிறது.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கலந்துகொண்டு கொடிவேரி குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், பெருந்துறை தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சித் தலைவர் ஜி.கே.செல்வம், துணைத்தலைவர் சக்திகுமார் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்