மதுரையில் வீடு புகுந்து ரூ.20 லட்சம் ரொக்கம்- நகைகள் கொள்ளை

மதுரையில் வீடு புகுந்து ரூ.20 லட்சம், 14 பவுன் நகைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர்.

Update: 2022-07-04 19:50 GMT

மதுரையில் வீடு புகுந்து ரூ.20 லட்சம், 14 பவுன் நகைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர்.

பொருட்கள் சிதறி கிடந்தன

மதுரை ஆண்டாள்புரம் வசந்த நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாச சங்கரநாராயணன் (வயது 55). கேட்டரிங் தொழில் நடத்தி வருகிறார். கடந்த 2-ந் தேதி திருச்சியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்றார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. மேலும் பீரோ மற்றும் அதன் உள்ளே இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.

கண்காணிப்பு கேமராக்கள்

அதில் இருந்த நகைகள் மற்றும் 20 லட்ச ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. இதைதொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் அங்கிருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது.

இதற்கிடையில் அந்த பகுதியில் உள்ள சில வீடுகளில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராக்கள் கீழே கவிழ்ந்து இருந்தன. அதுகுறித்து அந்த பகுதி மக்கள் நேற்று முன்தினம் காலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களும் அங்கு வந்து சோதனை மேற்கொண்டு திருட்டு ஏதும் நடந்ததா என்று அக்கம்பக்கம் விசாரித்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இரவு சீனிவாச சங்கரநாராயணன், தனது வீட்டிற்கு திரும்பிய பிறகுதான் அவரது வீட்டில் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது. எனவே கொள்ளையர்கள் அங்கு முன்னரே நோட்டமிட்டு தங்கள் அடையாளம் பதிவாகாமல் இருக்க, எங்கெங்கு கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன என கண்டுபிடித்து, அவற்றை கவிழ்த்து வைத்துவிட்டு சென்று கைவரிசை காட்டி உள்ளனர்.

ரூ.20 லட்சம், 14 பவுன் நகை

பின்னர் போலீசார், சீனிவாச சங்கரநாராயணனின் வீடு முழுவதும் மீண்டும் சோதனை செய்தனர். அப்போது வீட்டின் ஒரு பகுதியில் 26 பவுன் நகை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மூலம் அந்த வீட்டில் மொத்தம் 14 பவுன் நகை மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்