தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு துறை சார்பில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி நிதி
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தொழில் துறை சார்பில் ரூ.2 கோடிக்கான நிதியை உதயநிதி ஸ்டாலினிடம், டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியின் காரணமாக தொழில் துறையைப் பொறுத்தவரையில், இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலான கவனத்தையும் தமிழ்நாடு மிகவும் ஈர்த்துள்ளது. இந்த ஆண்டு விளையாட்டுப் போட்டிகளின் பயன்பாட்டிற்காக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காகவும், தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சிப்காட் நிறுவனம், நிறுவன சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் நிதியின் கீழ் 2 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இந்த காசோலையை வழங்கினார்.
பங்கேற்றோர்
இந்த நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுந்தரவல்லி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, சிப்காட் நிறுவனத்தின் செயல் இயக்குனர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.