குடியாத்தம் நகரில் குட்கா விற்ற 3 கடைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
குடியாத்தம் நகரில் குட்கா விற்ற 3 கடைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
குடியாத்தம் நகரில் குட்கா விற்ற 3 கடைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மளிகை, பெட்டி கடைகளில் ஆய்வு செய்து அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்யும்படி கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், ரவிச்சந்திரன், சிவமணி ஆகியோர் நேற்று குடியாத்தம் நகரில் உள்ள மளிகை, பெட்டி, டீ, ஜூஸ் கடைகள் என்று மொத்தம் 17 கடைகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர். இதில், 3 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அதேபோன்று 2 கடைகளில் இருந்து பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. உணவுப்பொருட்களை சரியாக பேக்கிங் செய்யாமல் விற்பனைக்கு வைத்திருந்த 2 மளிகை கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் அச்சிட்ட காகிதத்தின் மேல் சூடான வடை, சமோசா உள்ளிட்ட உணவுப்பொருட்களை வைக்கக்கூடாது என்று கடை ஊழியர்களிடம், உணவு பாதுகாப்புத்துறையினர் அறிவுறுத்தினர்.
----