பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிய தகவல்

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவதற்கான உதவித்தொகை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

Update: 2023-01-01 20:45 GMT


பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவதற்கான உதவித்தொகை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

வாக்குறுதிகள்

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன், இது குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தமிழக நிதி நிலைமை மிக மோசமாக இருக்கிறது. அதனை சீர் செய்யும் பணியினை தொடங்கி உள்ளோம். நிதி நிலைமை சீரானவுடன், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உள்பட தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களை இதர வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று கூறினார்.

ஆனால் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. உள்பட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அதே போல் மக்களிடையே இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று ஆர்வத்தோடு உள்ளனர். இந்த நிலையில், மதுரை ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியில் நடந்த அங்கன்வாடி மைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம், பெண்களுக்கான மாத உரிமைத்தொகை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

85 சதவீத பணிகள்

அதற்கு அவர் அளித்த பதில் விவரம் வருமாறு:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற போது, தமிழக நிதி நிலைமை மிக மோசமாக இருந்தது. தற்போது அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் நிதி நிலைமை சீராகி வருகிறது. வரி வருவாயில் 21 சதவீதம் வட்டிக்கு செலவிடப்பட்டது. தற்போது இதனை 11 சதவீதமாக குறைத்து இருக்கிறோம். 6 மாதத்திற்கு ஒருமுறை அரசின் வருவாய், செலவினங்களை ஆய்வு செய்து வருகிறோம். பல திட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த திட்டத்திற்கு மத்திய அரசு சரியாக நிதி தராததால் அதனை செயல்படுத்த முடியவில்லை.

2022-23-ம் ஆண்டின் மாநில உற்பத்தி ரூ.24 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் இது 2023-24-ம் ஆண்டில் ரூ.30 லட்சம் இருக்கும். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதற்கான திட்டத்திற்கு தரவு தளம் அமைத்தல், உண்மை தன்மையை கண்டறிதல் என 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. இந்த திட்டத்தை, இந்தாண்டு (2023) பட்ஜெட்டில் அறிவிப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்