மனுநீதிநாள் முகாமில் 375 பயனாளிகளுக்கு ரூ.91 லட்சம் நலத்திட்ட உதவி

சிறுவளையம் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 375 பயனாளிகளுக்கு ரூ.91 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

Update: 2022-07-27 18:58 GMT

சிறுவளையம் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 375 பயனாளிகளுக்கு ரூ.91 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

மனுநீதிநாள் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் சிறுவளையம் கிராமத்தில் சிறுவளையம், கருணாவூர், வேப்பேரி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, காவேரிப்பாக்கம் ஒன்றியக் குழு தலைவர் அனிதா குப்புசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சக்தி, ஒன்றிய குழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் 51 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, 29 பேருக்கு முதியோர் ஓய்வூதியம், 4 நபர்களுக்கு ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியம், 51 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை, 45 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, 13 பேருக்கு வீடு கட்ட ஆணை, 132 பழங்குடியினர் மக்களுக்கு நல வாரிய அட்டை, 9 பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ்கள் என 375 பயனாளிகளுக்கு ரூ.91.23 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

மக்களை தேடி

முன்னதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசுகையில் அரசு அலுவலகங்களை தேடி மக்கள் வந்த காலங்கள் மாறி தற்போது அரசு அலுவலகங்கள் மக்களை தேடி நேரடியாக சென்று பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர். இந்த முகாமில் மருத்துவ துறையின் மூலம் பொதுமக்கள் நிறைய பேர் சர்க்கரை, ரத்த கொதிப்பு வியாதிகள் போன்றவைகளுக்குஉடல் பரிசோதித்து கொண்டனர். கிராம மக்களின் உடல் உழைப்பு குறைந்துள்ளது. நன்றாக வேலை செய்தால் எவ்வித பிரச்சினைகளும் கிராம மக்களுக்கு ஏற்படாது.

பாரம்பரிய உணவுகளை சாப்பிட வேண்டும். உலகத்திலேயே சிறந்த உணவு பழக்கம் நம்முடைய உணவு பழக்கம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். கிராமங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. தூக்கி எறியும் பிளாஸ்டிக் மீண்டும் உணவுப் பொருட்கள் வழியாக நமது உடலுக்குள் செல்கிறது என்பதை உணர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

கிராமத்தில் காலியாக உள்ள இடங்களில் மரங்களை கிராம மக்களும், ஊராட்சி மன்ற தலைவர்களும் இணைந்து நடவேண்டும். செயல்பட வேண்டும். கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் அவர்கள் முறையாக பரிசோதிக்கப்பட்டு குறைபாடு நீக்க வேண்டும். அதற்கான அனைத்து வசதிகளும் அங்கன்வாடி மற்றும் சுகாதார மையங்களில் உள்ளது.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

நிகழ்ச்சியில் துணை கலெக்டர்கள் சேகர், தாரகேஸ்வரி, சத்திய பிரசாத், வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன், கால்நடை உதவியை இயக்குனர் பாஸ்கரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ருக்மணி, செல்வி, வடிவேலு, தாசில்தார் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, அன்பரசு மற்றும் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள்* பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்