வேலூர் பெண் என்ஜினீயரிடம் ரூ.6½ லட்சம் நூதன மோசடி

ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக பணம் கிடைப்பதாக கூறி வேலூர் பெண் என்ஜினீயரிடம் ரூ.6½ லட்சத்தை மர்மநபர்கள் நூதன முறையில் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-23 18:02 GMT

பெண் என்ஜினீயர்

வேலூர் சாய்நாதபுரத்தில் 30 வயதுகொண்ட பெண் என்ஜினீயர் தனது தாயுடன் வசித்து வருகிறார். கடந்த 12-ந் தேதி இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் டெலிகிராமில் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து டெலிகிராமில் அந்தப் பெண் அவர்களை தொடர்பு கொண்டார்.

அப்போது மர்ம நபர்கள் அந்த பெண்ணிடம் உங்கள் பெயரில் வர்த்தக கணக்கு ஒன்று தொடங்கப்படும். நீங்கள் செலுத்தும் தொகைக்கு கூடுதலாக பணம் அந்த கணக்கில் வரவு வைக்கப்படும். அதை நீங்கள் உங்களது வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்றனர்.

ரூ.6½ லட்சம்

இதை நம்பிய அந்தப் பெண் அவர்கள் அனுப்பிய இணையதள லிங்கில் சென்று தனது பெயரில் கணக்கு ஒன்று உருவாக்கி ரூ.2 ஆயிரம் செலுத்தினார். பின்னர் சிறிது நேரத்திலேயே அவருக்கு ரூ.2,800 வரவு வைக்கப்பட்டது. அந்த பணத்தை அவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொண்டார். இதனால் இந்த வர்த்தகம் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என்று அவர் முழுமையாக நம்பினார்.

அதைத்தொடர்ந்து அவர் 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பல தவணைகளில் ரூ.3 லட்சம் செலுத்தினார். இதையடுத்து அவரது வர்த்தக கணக்கில் ரூ.3 லட்சத்துடன் கூடுதல் பணம் சேர்ந்ததாக காண்பிக்கப்பட்டது. ஆனால் அந்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. தொடர்ந்து அந்த மர்மநபர்களை அவர் தொடர்பு கொண்ட போது உங்களுக்கான குறிப்பிட்ட தொகை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் பூர்த்தி செய்தால் மட்டுமே நீங்க செலுத்திய தொகை மற்றும் கூடுதல் தொகை உங்களால் பெற முடியும் என்றனர். இதை நம்பிய அந்தப் பெண் தனது வங்கியில் கடன் வாங்கி ரூ.6 லட்சத்து 51 ஆயிரம் வரை அந்த லிங்கில் சென்று பணத்தை செலுத்தியுள்ளார்.

மோசடி

இதையடுத்து அந்த பணத்தை அவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றும் முடியவில்லை. பின்னர் அவர் மீண்டும் மர்மநபர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கூறுகையில், ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் அதிக பணம் தருவதாக கூறி மர்மநபர்கள் மோசடி செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் தங்களது வங்கி கணக்கு விவரங்களை பகிர வேண்டாம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்